கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சட்டப்பேரவையில் சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, திண்டிவனம் தொகுதியில் விசிகவின் வெற்றிக்கு உழைத்த திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு நான் நன்றியைத் தெரிவித்தேன்.

அப்போது அவையில் நான் விளையாட்டாகச் சொன்ன ஒரு கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்களுக்கும் திருமாவளவனுக்கும் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அது கொள்கை கூட்டணி என்றும், என்னுடைய அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன் தான் என்றும் வெளிப்படையாகப் மனம் திறந்து பேசினார்.

அவரது இந்த முதிர்ச்சியான பேச்சுக்கு அப்போதே நான் நன்றியைத் தெரிவித்த நிலையில், தற்போது இலட்சக்கணக்கான சிறுத்தைகள் சார்பாகவும் அவருக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். ஆனால், உதயநிதி அவர்கள் திருமாவளவனைத் தனது அரசியல் ஆசான் என்று குறிப்பிட்டதைச் சகிக்க முடியாத சிலர், பெரியாரை ஆசான் என்று சொல்பவர் எப்படித் திருமாவளவனை ஆசான் என்று சொல்லலாம் எனக் கூறி விஷத்தைக் கக்கி வருகின்றனர்.

பெரியாருக்கு எதிராகச் சனாதன சக்திகளுடன் கூட்டு வைத்துள்ளவர்களுக்கு திடீரென பெரியார் மீது திடீர் கரிசனம் பொங்குவது வேடிக்கையாக உள்ளது. தந்தை பெரியார் எப்படிப் புரட்சியாளர் அம்பேத்கரைத் தனது தலைவராகப் போற்றினாரோ, அதேபோல் இன்று அண்ணன் உதயநிதி அவர்கள் எழுச்சித்தமிழரைத் தனது அரசியல் ஆசான் என வெளிப்படையாகப் பேசும் துணிச்சலைப் பெற்றுள்ளார்.

பெரியாரை எதிர்ப்பவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு இன்று பெரியார் மீது பாசம் காட்டுவது வியப்பாக இருக்கிறது. விசிகவின் அரசியல் நகர்வுகள் மற்றும் திராவிட இயக்கங்களுடனான கொள்கை உறவு மாறாது என்பதைத்தான் உதயநிதியின் இந்தக் கருத்து மிகத் தெளிவாக உணர்த்துகிறது; இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான் இன்று பொறாமையால் புலம்பித் தவிக்கிறார்கள்.

“>

 

பிறர் மீது கொள்ளும் பொறாமையே ஒருவனுக்குப் போதும், அவன் எதிரிகள் அழிக்காமலேயே தானே கெட்டுப் போவான் என்ற அய்யன் திருவள்ளுவரின் குறத்துக்கேற்பவே இவர்களின் நிலை அமைந்துள்ளது.