பாரம்பரியத் தொழில்களில் நஷ்டத்தைச் சந்திப்பவர்களுக்குக் காலத்தின் தேவைக்கேற்பத் தொடங்கப்படும் ‘மின்னணுக் கழிவு சேகரிப்பு மையம்’ ஒரு சிறந்த தொழில் வாய்ப்பாகும். குறைந்த போட்டியும் அதிக லாபமும் கொண்ட இந்தத் தொழிலை 2 முதல் 3 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்க முடியும்.

பழைய அல்லது பழுதடைந்த மொபைல்கள், லேப்டாப்கள், டிவி, பிரிண்டர்கள் மற்றும் வயர்கள் போன்ற மின்னணு சாதனங்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்பவர்களிடம் விற்பதே இதன் முக்கியப் பணியாகும். 500 முதல் 1000 சதுர அடி பரப்பளவிலான கிடங்கு, எடைக்கருவி மற்றும் அடிப்படை உபகரணங்களுடன் இந்தத் தொழிலை எளிதாகத் தொடங்கலாம்.

வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களிலிருந்து பழைய மின்னணு சாதனங்களைச் சேகரிக்கலாம். மேலும், மொபைல் பழுதுபார்க்கும் கடைகள், கணினி விற்பனையாளர்கள் மற்றும் குடியிருப்புச் சங்கங்களிடம் இருந்தும் இதற்கான கழிவுகளைப் பெற முடியும்.

பொதுவான மின்னணுக் கழிவுகள் கிலோ ரூ. 15 முதல் வாங்கப்படும் சூழலில், ஏசி மற்றும் லேப்டாப் பாகங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு கிலோ கழிவை ரூ. 100-க்கு வாங்கி ரூ. 140-க்கு விற்றால் 40% வரை நிகர லாபம் கிடைக்கும். மாதத்திற்கு 1 லட்ச ரூபாய்க்குச் சரக்குகளை விற்பனை செய்தால் ரூ. 40,000 வரை லாபம் ஈட்டலாம்.

இத்தொழிலைத் தொடங்க உத்யம் பதிவு, ஜிஎஸ்டி மற்றும் உள்ளூர் வணிக உரிமம் அவசியம். பெரிய அளவில் சேகரிப்பு மையம் அமைக்க விரும்புபவர்கள் மாநில மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரத்தைச் சரியாகப் பெற வேண்டும்.