மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா–சித்ரகூட் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மானிக்பூர் அருகே உள்ள டோடா அணை நிரம்பி உடைந்ததைத் தொடர்ந்து மானிக்பூர் மற்றும் சித்ரகூட் பகுதிகளில் வெள்ள நிலை உருவானது. இதன் காரணமாக சத்னா–மானிக்பூர் ரயில் வழித்தடத்தில் சித்தஹரா ரயில் நிலையம் அருகே தண்டவாளங்கள் முழுவதும் நீரில் மூழ்கின. சில இடங்களில் தண்டவாளமே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.

தண்டவாளத்தைச் சுற்றிலும் சுமார் 3 அடி உயரத்துக்கு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், வெள்ளநீருக்கு நடுவே ரயில்வே பணியாளர் ஒருவர் கையில் சிவப்புக் கொடியுடன் முன்னால் சென்று தண்டவாளத்தின் நிலையை ஆய்வு செய்வதும், அவரைப் பின்தொடர்ந்து ரயில் மிகவும் மெதுவாக இயக்கப்படுவதும் பதிவாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Hinduism (@hinduism)

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்வேயின் பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரோந்து குழுவினர், பாதை பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தண்டவாளத்தை தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே ரயில்கள் இயக்கப்பட்டதாக ஜபல்பூர் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் சுமார் 28 பயணிகள் ரயில்களும் 20 சரக்கு ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

வெள்ளப்பெருக்கு காரணமாக நீண்ட தூர ரயில்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்னா–மானிக்பூர் இடையே இயக்கப்படும் ஒரு மெமு ரயில் மட்டும் ரத்து செய்யப்பட்டது. வெள்ளநீருக்கு மத்தியில் தண்டவாளத்தை ஆய்வு செய்து ரயில் இயக்கத்துக்கு வழிகாட்டிய ரயில்வே பணியாளர்களின் பாதுகாப்புப் பணி தற்போது கவனம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்னா மற்றும் சித்ரகூட் பகுதிகளில் வெள்ள நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.