மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தாய் மற்றும் மாமாவை போலீஸார் கைது செய்துள்ளனர். பிப்லானி பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில், சிறுமி தனது விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், இதற்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக குடும்பத்தில் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயுஷி தனது தாயுடன் வீடுகளில் தூய்மைப் பணி மற்றும் சமையல் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் அவரது திருமணம் குறித்து பேச்சு நடைபெற்ற நிலையில், தனக்கு பிடித்த இளைஞரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்ததாக போலீஸார் கூறுகின்றனர். ஆனால், அவரது தாய் அதற்கு சம்மதிக்காமல், தனது விருப்பப்படி திருமணம் செய்து வைக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குடும்பப் பிரச்னையே சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திருமணம் தொடர்பாக வீட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுமி உயிரிழந்த நிலையில், போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீஸார் கொலை வழக்கை பதிவு செய்தனர். இதையடுத்து சிறுமியின் தாய் கமலா மற்றும் மாமா விஜய் ராய் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் விருப்பத் திருமணத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பே முக்கிய காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தனவா என்பதையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே சம்பவத்தின் பின்னணி மற்றும் உண்மையான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
