தமிழக அரசில் பணியாற்றும் திருமணமான பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொண்டாலும் இனி 365 நாட்கள் (1 முழு ஆண்டு) சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரசு பணியில் உள்ள திருமணமான பெண் ஊழியர்களின் 3-வது குழந்தைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 12 வார மகப்பேறு விடுப்பானது, இனி 365 நாட்களாக (1 ஆண்டு) உயர்த்தப்பட்டு முழு ஊதியத்துடன் வழங்கப்படும். நிரந்தர மற்றும் தற்காலிக பெண் அரசு ஊழியர்கள் இருபாலருக்கும் இந்த சலுகை பொருந்தும்.

இந்த அரசாணை வெளியாகும் முன்பே, 3-வது குழந்தைப் பேறுக்காக மகப்பேறு விடுப்பில் சென்று, தற்போது தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் ஊழியர்களும் இந்த 365 நாட்கள் விடுப்புச் சலுகையைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர் ஆவர். மேலும் தமிழ்நாடு அடிப்படை விதிகள் 1922-ன் கீழ் உள்ள விதி 101(a)-ல் இதற்கேற்ப திருத்தங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.