கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், தங்களுக்குள் ஏற்பட்ட கோழித்துண்டு தகராறு காரணமாக நண்பனைக் கத்தியால் குத்திக் கொன்ற விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் ஹுனாஷ்யல் பிஜி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியைச் சேர்ந்த சீதாராம் மற்றும் அருண் ஆகிய இருவரும், பெலகாவியில் உள்ள ஒரு எஃகு கம்பெனியில் வேலை செய்து வந்தனர். மேலும், அதே பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் மற்ற சில தொழிலாளர்களுடன் கூட்டாக வசித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று விடுமுறை நாள் என்பதால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, உணவருந்திக் கொண்டிருக்கும் போது அருண் தட்டை விடக் கூடுதலாகக் கோழித்துண்டுகளைச் சாப்பிட்டதாகக் கூறி சீதாராம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தொடங்கிய சிறிய வாக்குவாதம், கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த அருண், அங்கிருந்த கத்தியை எடுத்து சீதாராமின் நெஞ்சில் குத்தியுள்ளார்.
தன் நண்பன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைக் கண்ட அருண், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், தான் செய்த கொலையை மறைப்பதற்காக, சீதாராம் கட்டடத்திலிருந்து தவறி விழுந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகளிடம் நாடகமாடிப் பொய் கூறியுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அருண்குமாரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிரமாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோழித்துண்டு தகராறில் நண்பனைக் கத்தியால் குத்தியதை அருண் ஒப்புக்கொண்டார். இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி சீதாராம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அருண் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் பாலக்காட்டிலும் சிக்கன் கறி தகராறில் உறவினரால் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
