ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியில், கணவர் இறந்த சோகம் தாங்க முடியாமல் 23 வயது இளம் தாய் தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளி (23) என்பவரின் கணவர் உயிரிழந்து வெறும் 2 மாதங்களே ஆன நிலையில், கணவரின் பிரிவைத் தாங்க முடியாமலும் வாழ்க்கை சுமையை எதிர்கொள்ள முடியாமலும் வள்ளி தீவிர மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது 7 வயது மற்றும் 3 வயதுடைய இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு மங்கம்மாபேட்டை ரயில் தண்டவாளம் பகுதிக்குச் சென்றுள்ளார்.

​அப்போது அந்த வழியே வந்த ரயில் முன், இரண்டு குழந்தைகளுடனும் வள்ளி திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த கொடூர சம்பவத்தில் வள்ளியும் அவரது இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.