திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரைச் சேர்ந்த தம்பதிக்கு அண்மையில் பிறந்த பெண் குழந்தையை, பணத்திற்காக இடைத்தரகர்கள் மூலமாக விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதையறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உடனடியாக காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், 10 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த தம்பதிக்கு, இந்த 9 நாள் பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ததைக் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெற்ற பிள்ளையை விற்ற பெற்றோர் மற்றும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் உட்பட மொத்தம் 4 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
