திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள வயல்வெளிப் பகுதியில் மர்மமான முறையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அருணா (40) என்பவர், அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த நிலையில், திடீரென மாயமாகியுள்ளார். பின்னர் அவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதுடன், அவரது முகத்தில் ஆசிட் வீசப்பட்டு அடையாளம் தெரியாதவாறு கொடூரமாகச் சிதைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதுடன், அவரது முகம் முழுவதும் தீயால் எரிக்கப்பட்டு கருப்பு கிரீஸ் பூசப்பட்டிருப்பது காவல்துறையினரையே ஷாலடிக்க வைத்துள்ளது. அதேசமயம், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் தாலிச் செயின் போன்ற விலைமதிப்ப்பான பொருட்கள் எதுவும் தப்பவில்லை என்பதால், இது நகை திருட்டுக்காக நடத்தப்பட்ட கொலை அல்லவென்றும், வேறு ஏதேனும் முன்விரோதம் அல்லது தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தைக் கைப்பற்றிய ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்புகளை வைத்துத் துப்பு துலக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.