மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் கர்ணி சேனாவைச் சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காவல் நிலைய  பகுதியில் உள்ள  உணவகம் அருகே புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ராகுல் சிங் என்ற விஜய் பிரதாப் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும், பப்பு ஜாட் மற்றும் ஸ்ரவண் குமார் ராவ் ஆகிய இருவர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்ணி சேனாவின் பதவி தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு சக்தி சிங் மற்றும் ராகுல் சிங் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அந்தப் பிரச்னையை பேசி சமரசம் செய்வதற்காக அனைவரும் ஒன்றாக சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லக்கி தர்பார் உணவகத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட பின்னர் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. அப்போது அங்கு இருந்தவர்களில் சிலர் ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ராகுலின் சகோதரருக்கு இரவு 11 மணியளவில் சக்தி சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உங்கள் சகோதரனை காப்பாற்ற முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று எச்சரித்ததாக ராகுலின் மாமா ஹேமந்த் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு ராகுலும் அவரது நண்பர் ஜிதேந்திரரும் காயமடைந்த நிலையில் கிடந்ததாகவும், இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுடன் இருந்த பப்பு ஜாட் மற்றும் ஸ்ரவண் குமார் ராவ் ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காயமடைந்த ஸ்ரவண் குமார் ராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சக்தி சிங், அர்பித், ரமேஷ், சோனு பஞ்சாரா, அன்னா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரிட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மற்றவர்களைத் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கர்ணி சேனா பதவி தொடர்பான பழைய பிரச்னை மீண்டும் வெடித்ததே இந்த மோதலுக்கு காரணமாக இருக்கலாம் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.