மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக அரங்கேறி வரும் சம்பவங்கள் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இங்குள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பழுதடைந்த மற்றும் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்து வருவது மக்களைப் பதறவைத்துள்ளது.
குறிப்பாக, கடந்த மூன்று வார இடைவெளியில் மட்டும் சுமார் 60 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.
இதன் உச்சகட்டமாக, கடந்த ஒரே நாளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிர் துறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வரும் இந்தத் துயரச் சம்பவம் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பின் மீதான பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்துக் கதறி அழுவதுடன், உரிய நீதி கேட்டுத் துடித்து வருகின்றனர்.
இந்தத் தொடர் மரணங்கள் குறித்துத் தீவிரமாக விழித்துக்கொண்ட மாநில சுகாதாரத்துறை, சம்பந்தப்பட்ட மால்டா அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து உடனடியாக விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருவதாகவும், குழந்தைகள் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
