மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் பத்தாவது மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர், மரத்தின் கிளைகளில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது  ‘சன்ஷைன் எஸ்ஆர்ஏ’  என்ற கட்டிடத்தில்தான் இந்தச் சோகமும், அதே சமயம் அதிசயமும் நிகழ்ந்துள்ளது. அந்த கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். இவ்வளவு உயரத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்தால் என்னவாகும் என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்தது.

ஆனால், விதி அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு முடிவை எழுதியிருந்தது. அவர் நேரடியாகத் தரைக்குப் பதிலாக, கட்டிடத்தின் கீழே இருந்த ஒரு பெரிய மரத்தின் அடர்ந்த கிளைகளில் சிக்கிக் கொண்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அவரது உயிர் தப்பியது. மரத்தின் மேல் ஒரு பெண் சிக்கிக் கொண்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனடியாகப் போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் தீவிர மீட்புப் பணியில் இறங்கினர். மரத்தின் உச்சிக்குச் சென்று, அந்தப் பெண்ணுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படாதவாறு மிகுந்த எச்சரிக்கையுடன் அவரைப் பாதுகாப்பாகக் கீழே மீட்டு வந்தனர்.

10-வது மாடியில் இருந்து விழுந்தும் அந்தப் பெண் தப்பியது மிகப்பெரிய அதிசயம்தான் என்றாலும், அவர் எப்படி விழுந்தார் என்பது குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. இது ஒரு விபத்தா அல்லது இதற்குப் பின் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணின் நிலை மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொண்டு விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.