தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பான பல முக்கிய புதிய அறிவிப்புகளை அமைச்சர் சம்பத்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

​இதன்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் புதுமையாக நவீன சிகைதிருத்தும் அழகு நிலையம் (Modern Salon) அமைப்பதற்காக நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம், மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.

மேலும், தொழிலாளர்களின் தொழில் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 5,000 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ​கல்வி மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

​அத்துடன், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ரூ.3 கோடி செலவில் புதிதாக ‘மிக பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம்’ உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத்குமார் உறுதியளித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.