நேபாளத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் சூழ்ந்த வீட்டின் கூரை மீது சிக்கித் தவித்த இளைஞர் ஒருவரை நேபாள ராணுவம் ஹெல்காப்டர் மூலம் சினிமா பாணியில் மீட்ட அதிரடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தில் வீடுகள் முழுவதும் நீருக்குள் மூழ்கின. அப்போது ஒரு கட்டிடத்தின் கூரை மீது இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் தவித்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் ஆக்ரோஷமாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், அடித்து வரப்பட்ட குப்பைகளும் கூரையைச் சூழ்ந்திருந்தன.
தங்களை நோக்கி வந்த ராணுவ ஹெல்காப்டரைக் கண்ட அந்த இளைஞர், தனது டி-ஷர்ட்டை கழட்டி உயரே காட்டி சைகை செய்தார். உடனே துரிதமாகச் செயல்பட்ட ராணுவ மீட்புக் குழுவினர், ஹெல்காப்டரில் இருந்து கயிற்றைக் கீழே இறக்கி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர். ஆபத்தான இந்த மீட்புக் காட்சியை நேபாள ராணுவம் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. “எங்கு நெருக்கடி வருகிறதோ, அங்கு நேபாள ராணுவம் இருக்கும்” என்ற ராணுவத்தின் பதிவு பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
மத்திய நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு பெரும் உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரசுவா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவல்படி, இந்தப் பகுதியில் 300 இந்தியர்கள் உட்பட 579 பேர் மாயமாகியுள்ளனர்.
बाढी प्रभावितहरूको उद्धारमा #नेपालीसेना….
उच्च सतर्कता अपनाउँदै सुरक्षित रहन समेत अनुरोध !!!!
जहाँ संकट, त्यहाँ #नेपालीसेना#NepaliArmy#BhotekoshiFlood pic.twitter.com/CFmuLYQItr— Nepali Army (@NepaliArmyHQ) August 26, 2026
நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள போட்கோஷி நதியில் திடீரென பனிப்பாறை உடைந்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததே இந்த பேராபத்திற்குக் காரணமாகும். வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்ததுடன், சாலைகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேரவுகளும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. சீனா நாட்டின் கியிரோங் பகுதியையும் இந்த வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது.
சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மீட்புப் பணிகளுக்கு ஹெல்காப்டர்கள் மட்டுமே தற்போது ஒரே வழியாய் உள்ளன. வானிலை சீரற்ற நிலையிலும், கடுமையான சவால்களுக்கு இடையே நேபாள ராணுவத்தினர் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதோடு, மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
