பள்ளியில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கும், எப்போதும் சோர்வாக உணர்வதற்கும் படிப்பு அழுத்தம் மட்டுமே காரணம் அல்ல. மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கும், அதனால் உருவாகும் இரும்புச்சத்து குறைபாடுமே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வளரிளம் பருவத்தில் உடல் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பதால் இரும்புச்சத்துக்கான தேவை அதிகமாகும். இந்நிலையில், தொடர்ந்து 7 நாட்களுக்கு மேல் ரத்தப்போக்கு இருப்பது, 1-2 மணி நேரத்திற்கு ஒருமுறை பேடை மாற்ற வேண்டியிருப்பது போன்ற அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலில் உள்ள இரும்புச்சத்து சேமிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.

ஹார்மோன் மாற்றங்கள் சீராக இல்லாதது அல்லது ரத்தம் உறைவதில் ஏற்படும் சில குறைபாடுகள் காரணமாகப் பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். இதனால் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு மூளையின் செயல்பாட்டைப் பாதித்து, நினைவாற்றல் குறைவு, கவனச்சிதறல், தலைவலி மற்றும் கடுமையான சோர்வை உண்டாக்கும்.

எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சோர்வை வெறும் “சோம்பல்” அல்லது “தேர்வு பயம்” என்று அலட்சியப்படுத்தக் கூடாது. மாதவிடாய் நாட்களில் அளவுக்கு அதிகமான சோர்வு, தலைச்சுற்றல் அல்லது மூச்சுத்திணறல் இருக்கிறதா என்பதைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.

சுய மருத்துவம் செய்வதையோ அல்லது இரும்புச்சத்து மாத்திரைகளைத் தானாகச் சாப்பிடுவதையோ தவிர்த்து, மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சரியான நேரத்தில் பரிசோதித்துச் சிகிச்சை அளிப்பது மாணவிகளின் உடல்நலத்தையும் அவர்களின் கல்விச் செயல்திறனையும் பாதுகாக்க உதவும்.