மும்பை நகரின் வாழ்வாதாரமாகவும், லட்சக்கணக்கான மக்களின் தினசரி பயண நரம்பாகவும் விளங்குவது அங்கு இயக்கப்படும் லோக்கல் ரயில்கள் தான். நேரம் தவறாமல் தங்களை இலக்குகளுக்குக் கொண்டு சேர்க்கும் இந்த ரயில்களில், கூட்டம் நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது.

இந்நிலையில், விரார் நோக்கிச் சென்று கொண்டிருந்த லோக்கல் ரயில் ஒன்றில், பயணிகளுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது. ரயிலின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பயணிகள் ஒருவரையொருவர் தாக்கித் தாக்கிச் சண்டையிட்டுக் கொண்ட இந்த அதிரடி காட்சிகள், அங்கிருந்த சக பயணிகளால் வீடியோவாக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இதனால் சமீபகாலமாகவே மும்பை லோக்கல் ரயில்களில் இது போன்ற மோதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அந்தேரி – விரார் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த பெண்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அதுமட்டுமின்றி, அந்தேரி ரயில் நிலையத்தில் பயண சீட்டு இல்லாமல் பயணித்த நபரைச் சோதனையிட்ட ரயில்வே டிக்கெட் பரிசோதகர் பிரகாஷ் துபே என்பவரை, அந்தப் பயணி தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற சம்பவமும் அரங்கேறியது.

மேலும் கடந்த ஜூலை மாதம் ஓடும் ரயிலுக்குள் இளைஞர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட கும்பல் கொடூரமாகத் தாக்கிய நிகழ்வும், ரயிலின் கூரை மீது ஏறிய நபர் மின்சாரக் கம்பியைத் தொட்டு தடம் ஸ்தம்பித்த நிகழ்வுகளும் மும்பை ரயில்வே வட்டாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த தினமும் பல கோடி மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்தில், பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது என்பதை இந்தத் தொடர் சம்பவங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. சாதாரண சீட் பிடிக்கும் தகராறில் தொடங்கும் சிறு சிறு மனக்கசப்புகள், இதுபோன்ற ஆபத்தான வன்முறைகளில் போய் முடிவது சக பயணிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு ரயில்வே காவலர்கள் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், இதுபோன்ற வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“>