மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில், ‘விடுதலைக் கடல்’ பகுதி அருகே நின்று பேசிக்கொண்டிருந்த விசிக இளைஞர்கள் மீது அதே ஊரைச் சேர்ந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளால் கண்மூடித்தனமாக வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு நின்ற மூன்று பேரில் இருவர் தப்பிய நிலையில், செல்வம் என்ற இளைஞர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்க முயன்றபோது அவர் தன் கைகளால் தடுத்ததில் அவரது வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அதை இணைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து நள்ளிரவில் மருத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்திய விசிக தலைவர் திருமாவளவன், உடனடியாகத் தாக்குதலில் ஈடுபட்ட சாதிவெறி குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு உயர் காவல்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர் அருகே உள்ள அம்பேத்கர் நகரில், விசிக நிர்வாகியான அழகர் என்பவரும் மர்மக் கும்பலால் அரிவாளால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அதே அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு வன்கொடுமைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தடுப்புக்காவலில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“>

 

மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் உரிய இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.