இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பில் புதிய மைல்கல்லாக, உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் முழுமையாக இந்திய பாகங்கள் மற்றும் மூலப்பொருள்களை பயன்படுத்தி ஏகே-203 ‘ஷேர்’ துப்பாக்கி தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமான இந்தோ-ரஷ்யன் ரைஃபிள்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது.

அமேதியின் கோர்வா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் மாதிரி துப்பாக்கியில் சுடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சோதனைகளும் இடம்பெற்றதாகவும், ஆரம்பகட்ட முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏகே-203 தயாரிப்பில் இந்தியமயமாக்கல் 100 சதவீதத்தை எட்டியுள்ளது.

அடுத்த கட்டமாக, இதேபோன்று முழுமையாக இந்திய பாகங்களைக் கொண்டு மேலும் பல துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. அவை இந்திய ராணுவத்தின் சோதனைக்காக செப்டம்பர் 2026-ல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ சோதனைகளின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

இதற்கிடையில், ஏகே-203 ‘ஷேர்’ துப்பாக்கிகளின் உற்பத்தி வேகத்தையும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் சுமார் 100 விநாடிகளுக்கு ஒரு துப்பாக்கி என்ற அளவில் உற்பத்தி செய்யும் திறனை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் தயாரிப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.