அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்றுள்ள மும்பையைச் சேர்ந்த பிரபல டிஜிட்டல் கிரீட்டர் வாக்மிதா சிங், அங்குள்ள ஒரு காஃபேவில் தான் எதிர்கொண்ட விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அந்தக் கடையில் அவர் சண்ட்விச் ஒன்றை ஆர்டர் செய்தபோது, அதில் தனக்கு சீஸ் தேவையில்லை என்று குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார். ஆனால், அந்தப் பொருளை நீக்குவதற்காகக் கடையின் தரப்பிலிருந்து சுமார் 75 சென்ட், அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 72 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vagmita Singh (@thatindianchick_)

எந்தவொரு பொருளையும் சேர்ப்பதற்குப் பணம் வாங்குவது வழக்கமான ஒன்று என்றாலும், இருக்கிற ஒன்றை வேண்டாம் என்று நீக்குவதற்குக் கட்டணம் கேட்பது ஏன் என்ற அதிர்ச்சியில் அவர் இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த கடையின் ஊழியர்கள், தங்களது உணவகத்தில் ஒவ்வொரு சமையல் குறிப்பும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நிலையான முறையில் தயாரிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப அந்த ரெசிபியில் சிறு மாற்றங்களைக் கோரும்போது, சமையல் அறையில் உள்ள பணியாளர்கள் அதற்காகத் தனிப்பட்ட முறையில் மெனக்கெட வேண்டியிருப்பதால் இது கஸ்டம் ஆர்டராகக் கருதப்பட்டு கூடுதல் கட்டணம் ஈர்க்கப்படுவதாகக் கூறினர்.

தமது இந்த விசித்திரமான அனுபவத்தை அவர் சமூக வலைதளத்தில் காணொளியாக வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அது மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து மிகப்பெரிய வைரலானது. இந்த விவகாரம் இணையப் பயனர்கள் மத்தியில் இரண்டு துருவங்களாகப் பிளவுபட்டு விவாதத்தைக் கிளப்பியுள்ளது; ஒரு தரப்பினர் உணவகத்தின் இந்த நடைமுறைக்குக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மற்ற சிலரோ வெளிநாடுகளில் பணியாளர்களின் உழைப்புக்கும் நேரத்திற்கும் கொடுக்கப்படும் மதிப்பைக் கட்டணமாக ஈடுசெய்வதில் தவறில்லை என்று வாதிட்டு வருகின்றனர்.