கூட்டணி அமைப்புகள் இல்லாமல் திமுகவால் ஒருபோதும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் வெற்றிக்குத் தாங்களே காரணம் என்று திமுகவினர் கூறிவருவது முற்றிலும் உண்மைக்கு மாறானது எனக் கூறி தனது ஆவேசமான உரையைப் பதிவு செய்தார்.
கடந்த பல ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தான் திமுக அரசியலில் பயணித்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களது கட்சி எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கூட்டணியைச் நம்பி மட்டுமே அரசியல் செய்யும் திமுகவிற்குத் தனித்து நிற்கும் வலிமை இல்லை என்றும் அவர் அவையில் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால், தேர்தலில் 10 தொகுதிகளில் கூட திமுகவால் வெற்றிபெற்றிருக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் மட்டுமே திமுக சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் சாடினார்.
மேலும், திமுக இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே கூட்டணிக் கட்சிகள் கொடுத்த ஆதரவுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அமைச்சரின் இந்த நேரிடையானத் தாக்குதலும், கூட்டணி குறித்த அதிரடி கருத்துக்களும் சட்டப்பேரவை வளாகத்தில் மிகப்பெரிய சலசலப்பையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் உருவாக்கியுள்ளது.
