ஜப்பானின் புகழ்பெற்ற ‘மவுண்ட் புஜி’ மலையில் ஏறியபோது சோர்வடைந்த தனது 7 வயது மகனைப் பாதி வழியிலேயே தனியாகத் தவிக்கவிட்டு, மூத்த மகனுடன் தந்தை மலை உச்சிக்குச் சென்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகாயா பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், தனது இரு மகன்கள் மற்றும் நண்பருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
மலையின் 6-வது முகாம் பகுதியில் சுமார் 8,169 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, 7 வயது இளைய மகன் தனக்குக் களைப்பாக இருப்பதாகக் கூறியுள்ளான். இதைக் கேட்டுப் பயணத்தைப் பாதியில் நிறுத்த விரும்பாத தந்தை, சிறுவனை அங்கேயே அமர்ந்து காத்திருக்குமாறு கூறிவிட்டு, மூத்த மகனுடன் மலையின் உச்சியை நோக்கித் தொடர்ந்து சென்றுள்ளார்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே அப்பகுதியில் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவுடன் கூடிய மோசமான வானிலை நிலவியுள்ளது. அங்குள்ள மலைக்குடிலின் ஊழியர் ஒருவர், கடுங்குளிரில் அந்த சிறுவன் தனியாக பெஞ்சில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவனை மீட்டு உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் தந்தையைத் தொடர்பு கொண்டு எச்சரித்து, அவரைத் திரும்ப வரவழைத்துச் சிறுவனை ஒப்படைத்தனர். ஆபத்தான சூழலில் குழந்தையைத் தனியாக விட்டுச் சென்றதற்காகத் தனது தவறை ஒப்புக்கொண்ட தந்தை, அதிகாரிகளிடம் மன்னிப்புக் கோரினார்.
மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது குழுவில் உள்ள அனைவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பயணிக்க வேண்டும் என்றும், ஒருவருக்குச் சோர்வு ஏற்பட்டால் பயண வேகத்தைக் குறைக்க வேண்டும் அல்லது பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
