செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தையூர் பகுதியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் பிரவீன் குமாரின் குடும்பத்தினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

​பிரவீன் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்ற அவர், சோகத்தில் மூழ்கியிருந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், கட்சியின் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.1 லட்சம் நிதியுதவியை உடனடியாக அவர்களிடம் வழங்கினார்.

​அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கொடூரப் படுகொலையில் பாதிக்கப்பட்ட பிரவீன் குமாரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளையும் விசிக செய்யும் என்றும், அரசு தரப்பிலிருந்து உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை உடனடியாகப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

​தையூரில் நடைபெற்ற இந்த ஆணவப் படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறியுள்ள நடவடிக்கை சோசியல் மீடியாவிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.