திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் ஆளுங்கட்சியின் அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

​நிகழ்ச்சியில் பேசிய அவர், “சட்டமன்றத்திற்கு மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்காக நாங்கள் விரிவான குறிப்புகளை எடுத்துக்கொண்டு செல்கிறோம். ஆனால், அங்கு முதலமைச்சர் எதிர்க்கட்சிகள் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் முறையான பதில் அளிப்பதே இல்லை” என்று சாடினார்.

​மேலும் சட்டப்பேரவையில் நடைபெறும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், “சட்டப்பேரவையில் கேள்விகள் கேட்டால் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்துவிட்டுப் பாட்டு பாடினால் நான் எப்படிப் பாட முடியும்? இவர்கள் மாநிலத்தில் ஒரு ஆட்சியை நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனியை நடத்துகிறார்களா என்ற கேள்விதான் மக்களுக்கு எழுகிறது” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.

​சட்டமன்றத்தில் மக்களின் குரலை எதிரொலிக்க விடாமல் திசைதிருப்பும் முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய இந்த காரசாரமான பேச்சு, தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.