திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே நடப்பதாகவும், அங்கு மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் கடுமையாகச் சாடியுள்ளார்.
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திமுகவின் தலைமை மற்றும் கட்சிப் பொறுப்புகள் குறித்துப் பேசுகையில், “திமுகவில் உதயநிதி ஸ்டாலின் முதல்முறை எம்.எல்.ஏ ஆனவுடனேயே அமைச்சரானார்; தொடர்ந்து துணை முதல்வராகவும் ஆக்கப்பட்டார். தற்போது இரண்டாவது முறை எம்.எல்.ஏ ஆனவுடன் அவருக்கு நேரடியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஏ ஏன், அந்தத் திமுகவில் வேறு திறமையான தலைவர்களே இல்லையா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவில் எ.வ.வேலு, கே.என்.நேரு போன்ற பல மூத்த தலைவர்கள் பல ஆண்டுகளாகக் கட்சிக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும் ஓரங்கட்டிவிட்டு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அனைத்துப் பொறுப்புகளும் தூக்கிக் கொடுக்கப்படுகின்றன. இதிலிருந்தே திமுகவில் என்ன ஜனநாயகம் இருக்கிறது, என்ன சமூகநீதி பின்பற்றப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
திமுகவில் மூத்த தலைவர்கள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் அடுத்தடுத்து பெரிய பதவிகள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, அமைச்சர் மரிய வில்சன் பேசியுள்ள இந்த காரசாரமான பேச்சு, தற்போது சோசியல் மீடியாவில் தீயாகப் பரவி வருவதுடன், தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
