இந்திய ரயில்வே நிர்வாகம் தனது சரக்கு போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்துள்ளது. நாட்டின் முதல் முறையாக 1.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட இரட்டை அடுக்கு (Double Stack) கண்டெய்னர் ரயிலை இயக்கி வரலாற்றுச் சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது.
மும்பை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் (JNPT) இருந்து புறப்பட்ட இந்த ரயில், குஜராத் மாநிலத்தில் உள்ள வர்னாமா ரயில் நிலையம் வரை வெற்றிகரமாக இயக்கப்பட்டது. மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் (Western Dedicated Freight Corridor) வழியாகச் சுமார் 422 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் கடந்து சென்றுள்ளது.
இரண்டு பெரிய கண்டெய்னர் ரயில்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட இந்த ‘லாங் ஹால்’ (Long-haul) ரயிலில் மொத்தம் 360 கண்டெய்னர்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதன் மூலம் துறைமுகங்களில் தேங்கும் சரக்குகளை அதிவேகமாக வெளியேற்றவும், சாலைப் போக்குவரத்தில் லாரிகளின் நெரிசலைக் குறைக்கவும் பெரிய அளவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் சரக்குக் கையாளும் திறனையும் பொருளாதாரத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த பிரம்மாண்ட ரயிலின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய ரயில்வேயின் இந்த அதிரடி சாதனை நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
