உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் நேரத்தை விடுத்து, சினிமா பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிடும் சம்பவம் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியைகள் குத்தாட்டம் போடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

முசாஃபர்நகர் மாவட்டம், கத்தௌலி மற்றும் புர்காஜி பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில்தான் இந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. வகுப்பறைகளில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியைகள், பள்ளி நேரத்தை வீணடித்து சினிமா பாடல்களுக்குப் போட்டுள்ள கலக்கலான நடனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன.

ஆசிரியர்கள் தனியாக ஆடியதோடு நில்லாமல், பள்ளியில் பயிலும் சிறுவயதுக் குழந்தைகளையும் உடன் சேர்த்துக்கொண்டு சினிமா ஸ்டைலில் நடனமாட வைத்துள்ளனர். மேலும், பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஆபத்தான முறையில் ஸ்டண்ட் சாகசங்களைச் செய்து வீடியோக்களைத் தயாரித்து ஆன்லைனில் பதிவேற்றியுள்ளனர். எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்புள்ள இடத்திலிருப்பவர்களே இப்படி நடந்துகொள்வது பெற்றோர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவரும் சூழலில், ஆசிரியர்களின் இந்த பொறுப்பற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் கல்வியையும் போதிக்க வேண்டியவர்கள், தங்களது சொந்த சமூக வலைதளப் பக்கங்களின் ரீல்ஸ் மோகத்திற்காக பள்ளிகளைப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்ற நியாயமான கோபம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் வைரலானதை அடுத்து, முசாஃபர்நகர் மாவட்ட அடிப்படை கல்வித் துறை உடனடியாக விழித்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி சந்தீப் குமார் கூறுகையில், “இந்த விவகாரம் இன்றுதான் என் கவனத்திற்கு வந்தது. உடனடியாக சம்பத்தப்பட்ட வட்டாரக் கல்வி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.

விசாரணை முழுமையாக முடிவடைந்ததும், உண்மைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.