ஸ்வீட் கார்ன் எனப்படும் இனிப்புச் சோளம் சுவையானது மட்டுமின்றி உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய ஆரோக்கியமான உணவாகும். இதில் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் பெருமளவில் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தைச் சீராக்கி மலச்சிக்கலைத் தடுப்பதுடன், இதய ஆரோக்கியத்தைப் பேணி உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலையும் வழங்குகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த ஸ்வீட் கார்னை வைத்து மாலையில் சுடச்சுட மொறுமொறுப்பான பக்கோடா தயார் செய்யலாம். இதற்கு ஸ்வீட் கார்ன், கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, ஓமம், தனியா, சீரகம், பெருஞ்சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு, எண்ணெய் ஆகியவை தேவையாகும்.
செய்முறைக்கு முதலில் ஸ்வீட் கார்னை உதிர்த்து ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாகப் போட்டால் எண்ணெயில் பொரியும்போது வெடிக்க வாய்ப்புள்ளதால் தட்டிச் சேர்ப்பதே பாதுகாப்பானது. பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, பொடித்த தனியா, ஓமம், கடலை மாவு மற்றும் மசாலாப் பொடிகளைத் தட்டிய கார்னுடன் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்குப் பிசைந்துகொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்துப் பிசைந்த மாவைச் சிறு சிறு பக்கோடாக்களாக உதிர்த்துப் போட வேண்டும். மிதமான தீயில் வைத்து வேகவைக்கும் போதுதான் ஸ்வீட் கார்ன் உட்பகுதி வரை நன்றாக வெந்து மொறுமொறுப்பாக மாறும்.
சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் வரை பொறுமையாக வேகவிட்டு, பக்கோடா பொன்னிறமாக மாறியதும் எண்ணெயை வடித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான, மொறுமொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா தயார். மாலை நேரத்தில் சுடச்சுடத் தேநீருடன் பருக இந்தச் சிற்றுண்டி மிகவும் அருமையான தேர்வாகும்.
