ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 பள்ளி மாணவியை, காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

​சேலம் மாவட்டம் மேட்டூர் பாலமலையைச் சேர்ந்த செல்வராஜ் (24) என்பவர் பல்லடத்தில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து கொண்டு, விடுமுறை நாட்களில் கேட்டரிங் பணிக்கும் சென்று வந்துள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு கவுந்தப்பாடியில் நடந்த விழா ஒன்றில் கேட்டரிங் பணிக்குச் சென்றபோது, அந்த 16 வயது மாணவியுடன் செல்வராஜுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

​தொடர்ந்து நெருக்கமாகப் பேசி வந்த செல்வராஜ், கடந்த 20.10.2025 அன்று சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி, அந்தச் சிறுமியை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே, மகள் காணாமல் போனது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, கொல்லிமலையில் இருந்த சிறுமியையும் செல்வராஜையும் மீட்டனர்.

​சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜைக் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி சி.சொர்ணகுமார், குற்றவாளி செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளார்.