ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி உலக புகைப்பட தினம் உலகெங்கிலும் மிகவும் விமரிசையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புகைப்படக் கலையின் வரலாறு, அதன் அறிவியல் தாக்கம் மற்றும் இக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களைக் கவுரவிக்கும் நோக்கத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றின்படி, கடந்த 1839-ம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோர் இணைந்து ‘டேகுயரோடைப்’ என்ற புகைப்பட முறையைக் கண்டுபிடித்தனர். பிரெஞ்சு அரசு இதற்கான காப்புரிமையை வாங்கியதுடன், இந்த நாளைப் புகைப்படக் கலையின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாக அறிவித்தது. தொடர்ந்து, முதன்முதலில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று உலகளாவிய அளவில் ஆன்லைன் கேலரி மற்றும் கண்காட்சிகள் மூலம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டதை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கலைஞர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, உலக புகைப்பட நாளை முன்னிட்டுப் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைச் சந்தித்துக் காணொளி எடுத்து மகிழ்ந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.