இந்தூரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில், தனது குழந்தையுடன் பயணித்த பெண் ஒருவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. பயணத்தின் போது அசதியால் அவர் தூங்கிய நேரத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் அவர் வைத்திருந்த பர்ஸைத் திருடிச் சென்றுள்ளார். அதில் ரொக்கப் பணம், மொபைல் போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

​தூக்கத்திலிருந்து எழுந்ததும் தனது பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளானார். ஆனால், அந்த ஆத்திரத்தை காவல்துறைக்கோ அல்லது ரயில்வே அதிகாரிகளுக்கோ தெரியப்படுத்துவதற்குப் பதிலாக, அவர் பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் கண்ணாடியை நோக்கியே திருப்பினார்.

​ஆத்திரம் தலைக்கேறிய நிலையில், கையில் கிடைத்த பொருளைக் கொண்டு ரயிலின் கண்ணாடியை தொடர்ச்சியாக அடித்து நொறுக்கத் தொடங்கினார். கண்ணாடி முற்றிலும் நொறுங்கித் தவிடுபொடியாகும் வரை அவர் தொடர்ந்து அதைத் தாக்கிக் கொண்டே இருந்தார். குழந்தையுடன் வந்த ஒரு பெண் நடுரயிலில் இப்படி வெறியாட்டம் ஆடியதைப் பார்த்து சக பயணிகள் பெரும் அச்சமடைந்தனர்.

​ரயில்வே சொத்து என்பது பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் பொதுச்சொத்தாகும். தனக்கு நேர்ந்த இழப்பிற்கு அதிகாரிகளிடம் புகார் அளித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதே முறையான அணுகுமுறையாகும். அதை விடுத்து, கோபத்தில் பொதுச்சொத்தை சேதப்படுத்துவது அடிப்படை குடிமைப் பொறுப்புணர்ச்சியே (Civic sense) இல்லாத ஒரு செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

​இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், “தனியார் நபர் செய்த தவறுக்காக பொதுச்சொத்தை சேதப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று நெட்டிசன்கள் பலரும் அந்தக் பெண்ணின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.