ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஒங்கோல் பகுதியில் உள்ள மார்க்கெட் சென்டர் பகுதியில் அமைந்துள்ள ‘சாய் சூர்யா’ அடுக்குமாடி குடியிருப்பில் மிகவும் சோகமான மற்றும் நெஞ்சை உலுக்கும் விபத்து ஒன்று நடந்துள்ளது. வினிதா (50) என்ற பெண், லிஃப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வினிதா வழக்கம்போல் லிஃப்ட்டைப் பயன்படுத்தித் தரை தளத்திற்கு இறங்க முயன்றுள்ளார். அப்பொழுது அவர் லிஃப்ட்டில் இருந்து வெளியே கால்வைக்கும் தருணத்தில், லிஃப்ட்டின் கதவுகள் முழுமையாக மூடுவதற்கு முன்பே இயந்திரக் கோளாறு காரணமாக லிஃப்ட் திடீரெனக் கீழே இறங்கத் தொடங்கியுள்ளது.

இதைக் கவனிப்பதற்குள் வினிதா லிஃப்டுக்கும் தரைக்கும் இடையே நடுவழியில் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த விபத்து நடந்த நேரத்தில் அவருடன் மற்றொரு பெண்ணும் ஒரு சிறுவனும் லிஃப்ட்டில் இருந்துள்ளனர். மற்ற இருவரும் எந்தவிதப் பிரச்சினையுமின்றி சாதாரணமாக வெளியேறிவிட்ட நிலையில், வினிதா சிக்கிக்கொண்டதைக் கண்டு அதிர்ந்துபோன உடன் வந்த பெண், லிஃப்டை மேலே இயக்க அவசரமாக பட்டன்களை அழுத்திப் பார்த்துள்ளார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. சிறுவனும் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து கதறியுள்ளான்.

இவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மற்ற குடியிருப்பாளர்கள், உடனடியாகக் கடுமையாகப் போராடி வினிதாவை லிஃப்ட்டில் இருந்து வெளியே மீட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிஃப்ட்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்துக் கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.