உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா பகுதியில் வரதட்சணை கொடுமை தொடர்பாக அதிர்ச்சி புகார் ஒன்று வெளியாகியுள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக 7 மாத கர்ப்பிணியான நஸ்ரீன் காத்தூன் போலீஸில் புகார் அளித்துள்ளார். ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கச் சங்கிலி கேட்டு தொந்தரவு செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தன்னை தாக்கியதாகவும், பின்னர் கணவர் மூன்று முறை தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நஸ்ரீன் காத்தூனுக்கும், அப்துல் காதிருக்கும் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது தங்களால் முடிந்த அளவுக்கு சீர்வரிசை மற்றும் வரதட்சணை வழங்கியதாக நஸ்ரீனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் திருமணத்துக்குப் பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தல் தொடங்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
கணவர் அப்துல் காதிர், மாமியார் நாஸ்ரா மற்றும் மாமனார் அப்துல் வாஹித் ஆகியோர் ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கச் சங்கிலி கேட்டு அழுத்தம் கொடுத்ததாக நஸ்ரீன் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தன்னை அடிக்கடி துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தன்னை முடியைப் பிடித்து தாக்கியதாகவும் நஸ்ரீன் குற்றம்சாட்டியுள்ளார். தகவல் அறிந்து அவரது தந்தையும் சகோதரரும் வீட்டுக்கு சென்றபோது அவர்களிடமும் தகராறு செய்து தாக்கியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காயமடைந்த நஸ்ரீனை அவரது குடும்பத்தினர் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையும் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணவர் தன்னை மூன்று முறை தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் நஸ்ரீன் போலீஸில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். கணவர், மாமியார் மற்றும் மாமனார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். போலீஸார் புகாரை பெற்று, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
