தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனைப் பிரிந்து தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்த பெண் ஒருவர், முன்னாள் கள்ளக்காதலனால் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் (வயது 47) என்பவருக்கும் குருவலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனால் சின்ன கெங்குராஜின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதேபோல், குருவலட்சுமியும் தனது கணவரைப் பிரிந்து சின்ன கெங்குராஜுடன் சேர்ந்து வெளியூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்த நிலையில், உறவினர்கள் குருவலட்சுமியைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்ட குருவலட்சுமி, சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலன் சின்ன கெங்குராஜை விட்டுப் பிரிந்து, மீண்டும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். தன்னைப் பிரிந்துவிட்டு மீண்டும் கணவருடன் சென்ற குருவலட்சுமியைக் கண்ட சின்ன கெங்குராஜ் கடும் ஆத்திரமடைந்துள்ளார். தொடர்ந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அவர் குருவலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 10-ஆம் தேதி அன்று குருவலட்சுமியின் கணவரும் குழந்தைகளும் வெளியே சென்றிருந்தனர். இந்தத் தனிமையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சின்ன கெங்குராஜ், நேராக குருவலட்சுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து தன்னுடன் வருமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அதற்கு குருவலட்சுமி கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ் அவரைத் தாக்கிவிட்டு, அங்கிருந்த மண்ணெண்ணெய்யை அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
உடலில் தீப்பற்றி அலறிய குருவலட்சுமியின் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சின்ன கெங்குராஜை உடனடியாகக் கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குருவலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கை கொலை முயற்சி வழக்கிலிருந்து கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
