ஹாங்காங்கில் சுமார் 60 கிலோ எடையும், ஒன்றரை மீட்டர் நீளமும் கொண்ட ஒரு பெரிய நாய், இரண்டு சிறிய செல்லப் பிராணிகளைக் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திங்கள்கிழமை பிற்பகல் யுவன் லாங் பகுதியில் உள்ள யோஹோ மால் வாகன நிறுத்துமிடம் அருகே 58 வயது நபர் ஒருவர், தனது 17 வயது மினியேச்சர் பூடில் நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெரிய நாய், பூடில் நாயைக் கொடூரமாகத் தாக்கியது. படுகாயமடைந்த அந்த நாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் நடந்த அடுத்த 20 நிமிடங்களிலேயே, அதே நாய் அருகிலிருந்த பூங்கா அருகே 4 வயதுடைய பிஷான் ஃபிரைஸ் என்ற மற்றொரு சிறிய நாயையும் தாக்கியது. அந்த நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

வைரலாகும் காணொளியில், பெரிய நாய் சிறிய நாயின் கழுத்தைக் கவ்விப் பிடிப்பதும், அதை விடுவிக்க வழியோகிகள் போராடுவதும், உரிமையாளர் செய்வதறியாது கதறி அழுவதும் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் அந்தப் பெரிய நாயைப் பிடித்துச் சென்றுள்ளனர்.

அந்த நாயின் கழுத்தில் பட்டை இருந்ததால் அது வளர்ப்பு நாய் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஹாங்காங்கில் 20 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட நாய்களைப் பொது இடங்களுக்குக் கூட்டி வரக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.