இந்திய வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையான இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில், பாகிஸ்தானின் நிறுவனரான முஹம்மது அலி ஜின்னாவின் உடல்நிலை குறித்த அதிர்ச்சிகரமான உண்மையை எவருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பாதுகாத்த மும்பையைச் சேர்ந்த இரண்டு பார்சி மருத்துவர்களுக்கு, பல தசாப்தங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1930-களிலிருந்து முஹம்மது அலி ஜின்னா தீவிர காசநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆனால், அவரது உடல்நிலை எந்த அளவுக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்தது என்பது அவரது மிக நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. இந்நிலையில், கடந்த 1946-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் டாக்டர் ஜல் ரதன்ஜி படேல் மற்றும் கதிர்வீச்சு நிபுணர் டாக்டர் ஜல் தைய்போ-கூ ஆகியோர் ஜின்னாவின் எக்ஸ்-ரே படங்களைச் பரிசோதித்தனர். அப்போது, அவரது காசநோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும், அவர் இன்னும் ஒராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழக்கூடும் என்றும் அவர்கள் அதிர்ச்சிகரமான முடிவுக்கு வந்தனர்.

பிரிவினைக் காலத்தின் அரசியல் சூழ்நிலைகளைக் தலைகீழாக மாற்றக்கூடிய அளவுக்குப் பெரும் சக்தி வாய்ந்ததாக அந்தத் தகவல் இருந்தபோதிலும், அந்த மருத்துவர்கள் தாங்கள் பார்த்த நோயாளியின் இரகசியத்தை வெளியே யாரிடமும் கசியவிடவில்லை. மருத்துவ நெறிமுறைகளைக் காப்பாற்றும் வகையில் ஜின்னாவின் இன்னர் சர்க்ககலைத் தாண்டி அந்தத் தகவலை அவர்கள் எங்குமே வெளிப்படையாகப் பேசவில்லை.

ஒருவேளை ஜின்னாவின் உடல்நிலை குறித்த உண்மையை பிரிட்டிஷ் மற்றும் இந்தியத் தலைவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தால், பிரிவினையின் போக்கும் அதன் நேரமும் மாறியிருக்குமா என்ற வரலாற்று விவாதம் இன்றும் நீடித்து வருகிறது. பிரபல வரலாற்று நூலான ‘பிரீடம் அட் மிட்நைட்’ (Freedom at Midnight) புத்தகத்திலும் இந்தச் சம்பவம் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

கடைசி வைஸ்ராயான லூயிஸ் மவுண்ட்பேட்டன் கூட, “ஜின்னாவின் உடல்நிலை குறித்து எனக்கு முன்பே தெரிந்திருந்தால், நான் அதிகார மாற்றத்தைத் தாமதப்படுத்தியிருப்பேன்” என்று பிற்காலத்தில் குறிப்பிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் இந்த விவாதத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளன. பிரிவினைக்குப் பிறகு ஜின்னாவின் உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்தது. பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து ஓராண்டு கடந்த நிலையில், கடந்த 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அவர் நுரையீரல் காசநோய் காரணமாக காலமானார்.

ஜின்னாவின் இறப்புக்குப் பிறகு பல தசாப்தங்கள் கடந்த நிலையில், அவர் வாழ்ந்த காலத்தில் மருத்துவர்கள் காட்டிய அந்த மௌனமும் தொழில்முறை இரகசியமும் தான் பாகிஸ்தான் உருவாவதற்குக் காரணமான சூழ்நிலைகளில் தற்செயலாக முக்கியப் பங்கு வகித்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் திட்ட அமைச்சரும், விருதுக் குழுவின் தலைவருமான அஹ்சான் இக்பால், இந்த இரண்டு மருத்துவர்களின் அமைதியான மற்றும் அசாதாரண சோவையைப் பாராட்டி, அவர்களுக்கு நாட்டின் மிக உயரிய குடிமை விருதான ‘நிஷான்-இ-இம்தியாஸ்’ விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த உயரிய விருது வரும் 2027 மார்ச் மாதம் நடைபெறும் அதிகாரப்பூர்வ விழாவில் மறைந்த அந்த மருத்துவர்களுக்காக வழங்கப்பட உள்ளது.