சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, தான் எப்போதும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடையை அணிந்து வருவதற்கான சுவாரஸ்யமான மற்றும் உருக்கமான காரணத்தை வெளிப்படுத்திப் பேசினார்.

​பேரவையில் உரையாற்றிய அவர், “ஏன் நீங்கள் எப்போதும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உடையில் மட்டுமே வருகிறீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதற்கு இன்று நான் பதில் கூற கடமைப்பட்டுள்ளேன். இதுவரை எந்த ஒரு பெரிய அரசியல் தலைவரும் இஸ்லாமிய பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தையோ அல்லது முதலிடத்தையோ வழங்கியதில்லை” என்று குறிப்பிட்டார்.

​மேலும் தொடர்ந்த அவர், “ஆனால் எங்கள் தலைவர் ஆட்சியைத் தொடங்கிய முதல் நாளிலேயே எனக்குக் கொள்கைப் பரப்பு துணைப் பொதுச்செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பைக் கொடுத்துக் கௌரவித்தார். அதுமட்டுமின்றி, மேடைகளிலும் நிகழ்வுகளிலும் எனக்குத் தன் அருகிலேயே இடமளித்து அமர வைத்து அழகு பார்த்தார். அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய பெண்களும் பெருமை கொள்ளும்படி எங்கள் தலைவர் நடந்துகொண்டார்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

​”எந்த ஒரு மாபெரும் தலைவருக்காகவும் அவரது கொள்கைகளுக்காகவும் நான் இந்தக் கட்சிக்கு வந்தேனோ, அந்தத் தலைவரின் அடையாளமான இந்த ஆடையைத்தான் என் சாகும் நாள் வரை அணிவேன் என்று அன்றே நான் உறுதியாக முடிவு செய்தேன். இதுவே எங்களுடைய அடையாளம் என்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன்” என்று எம்.எல்.ஏ தாஹிரா உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். சட்டமன்றத்தில் அவர் பேசிய இந்த உருக்கமான உரை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.