மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிக்கும் பெண்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலி மற்றும் மாங்கல்யங்களை நைசாகப் பறித்து வந்த 65 வயது மூதாட்டியைப் பிடித்து ரயில்வே காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான அந்தப் பெண் புனே நகரைச் சேர்ந்த அனகா ஜோஷி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க அமைதியான தோற்றத்துடனும், வயது முதிர்ந்த அனுபவத்துடனும் காணப்படும் இந்த மூதாட்டி, ரயில் பயணிகளின் சந்தேகத்திற்கு சற்றும் ஆளாகாமல் மிகவும் திறம்படத் திருடி வந்திருப்பது காவல்துறைக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அனகா ஜோஷி வாரத்தின் மற்ற நாட்களில் புனேவில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, சனிக்கிழமைகளில் மட்டுமே திருடுவதற்காகப் புனேவில் இருந்து மும்பைக்குப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமைகளில் மும்பை மின்சார ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நெரிசலைப் பயன்படுத்திப் பெண்களின் நகைகளைக் கச்சிதமாகக் கழற்றி விடுவதை வாடிக்கையாகக் வைத்துள்ளார்.

இதனால் ‘சனிக்கிழமை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று அவரே காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருப்பது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. தொடர்ந்து ரயில்களில் நகைகள் காணாமல் போவது குறித்துப் பயணிகள் அளித்த புகார்களின் பேரில், தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே காவல் துறையினர், சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த அனகா ஜோஷியைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வயது முதிர்வை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, யாருக்கும் சந்தேகம் வராதபடி இத்தனை காலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இந்த மூதாட்டியின் செயல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.