ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவுகளுக்கோ அல்லது காரசாரமான சாப்பாட்டிற்கோ தொட்டுக்கொள்ள ஏற்ற சுவையான மற்றும் மணமான வெள்ளரிக்காய் தயிர் பச்சடியை மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். குறிப்பாகப் பேச்சுலர்கள் மிகக் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சிறந்த ஆரோக்கியமான உணவு இதுவாகும்.

இதற்குத் தேவையான வெள்ளரிக்காயைத் தோல் மற்றும் விதைகளை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

மசாலா அரைப்பதற்குத் துருவிய தேங்காய், தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வெந்து கொண்டிருக்கும் வெள்ளரிக்காயுடன் இந்த அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும். கலவை நன்றாக ஆறின பிறகு கெட்டியான தயிரைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.

இறுதியாக ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பச்சடியில் கொட்டினால் சுவையான வெள்ளரிக்காய் தயிர் பச்சடி தயார்.