உஜ்ஜைனில் உள்ள மகாகாலர் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்ற கோவாவைச் சேர்ந்த ஷும்பாங் போர்கர், கோயிலுக்கு வெளியே தனது செருப்புகளை கழற்றி வைத்துள்ளார். தரிசனம் முடிந்து திரும்பியபோது, அங்கு ஏராளமான செருப்புகள் குவிந்திருந்ததால் தனது செருப்புகளை அடையாளம் காண முடியாமல் தவித்துள்ளார். இதையடுத்து, வழக்கமான தேடலைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியை நாட முடிவு செய்துள்ளார்.
அவர் முதலில் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த செருப்புகள் மற்றும் காலணிகளின் வீடியோவை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை ChatGPT-க்கு அனுப்பியதுடன், தனது செருப்புகளின் புகைப்படத்தையும் தனியாக பதிவேற்றியுள்ளார். இதன் மூலம் தனது செருப்புகளை மற்றவற்றில் இருந்து அடையாளம் காணும்படி ChatGPT-யிடம் கேட்டுள்ளார்.
View this post on Instagram
இதையடுத்து, அவர் எடுத்த பல்வேறு புகைப்படங்களை ChatGPT ஆய்வு செய்து, அதில் தனது செருப்புகளைப் போன்ற ஒரு ஜோடியை அடையாளம் காண முயன்றுள்ளது. இறுதியில், ரேக்கின் வலது புறத்தில், நடுப்பகுதிக்கு அருகே கீழே ஒரு ஜோடி இருப்பதாக ChatGPT சுட்டிக்காட்டியுள்ளது. அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு உண்மையிலேயே ஷும்பாங் போர்கரின் செருப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை ஷும்பாங் போர்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். செருப்புகளைத் தேடுவதற்கே ChatGPT-யின் உதவியைப் பயன்படுத்திய இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பலரும் செயற்கை நுண்ணறிவை இதுபோன்ற அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
