மெக்சிகோவில் சிக்கித் தவிப்பதாகக் கூறி பஞ்சாபைச் சேர்ந்த சீக்கிய இளைஞர் ஒருவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 33 விநாடிகள் மட்டுமே உள்ள அந்த வீடியோவில், அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்படுகிறார். சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் ‘டாங்கி’ பாதையை யாரும் தேர்வு செய்ய வேண்டாம் என்றும் அவர் மற்றவர்களை எச்சரிக்கிறார். தான் செய்தது தவறு என்றும், அதற்கான விலையை ஏற்கெனவே கொடுத்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
வீடியோவில் படுக்கையில் இருக்கும் அந்த இளைஞர், கைகளை கூப்பியபடி உதவி கோருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சட்டவிரோத பாதை மூலம் மெக்சிகோ சென்றதாகவும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் சரியாக நடக்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இளைஞரின் பெயர், அவர் இருக்கும் இடம் உள்ளிட்ட எந்த தகவலும் வீடியோவில் தெரிவிக்கப்படவில்லை.
“Made A Mistake”: Punjab Youth Warns Against ‘Donkey’ Route In Tearful Video From Mexico pic.twitter.com/0Mn0osGBpM
— NDTV (@ndtv) August 14, 2026
மேலும், வீடியோவை பதிவு செய்யும் நபரை சுட்டிக்காட்டிய இளைஞர், தன்னை அந்த நபர்தான் அங்கு அழைத்து வந்ததாகக் கூறுகிறார். இதுபோன்ற பாதைகளில் சிக்கிக்கொண்டால் தப்பிப்பது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார். “நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள்” என்ற வகையில் அவர் மற்றவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ ஆகஸ்ட் 13-ஆம் தேதி சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
‘டாங்கி’ பாதை என்பது சட்டவிரோதமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்குள் செல்ல முயற்சிப்பவர்கள் பல்வேறு நாடுகள் வழியாக பயணிக்கும் சட்டவிரோத குடியேற்ற முறையாகும். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பயணங்களில் மோசடி, பணம் பறிப்பு, தடுத்து வைத்தல் மற்றும் வன்முறை உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வைரலாகி வரும் இந்த இளைஞரின் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கூறிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
