அமெரிக்காவை சேர்ந்த ஓமர் அகமது மற்றும் நௌஷீன் கில்கர் தம்பதியினர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற பெண்ணை வாடகைத் தாயாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தத்தில், சிசுவிற்கு ஏதேனும் கடுமையான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் கருவைக் கலைக்கலாம் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கருவின் 20-வது வாரத்தில் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், குழந்தைக்கு இதயத்தின் இடது பகுதி முழுமையாக வளர்ச்சியடையாத குறைபாடு இருப்பது தெரியவந்தது. மேலும், குழந்தை பிறந்த உடனேயே சில அவசர அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கருவைக் கலைக்குமாறு பெற்றோர் கோரியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த வாடகைத் தாய் மெக்கென்னா, குழந்தையைத் தானே வளர்த்துக் கொள்வதாகக் கூறி, கருக்கலைப்புக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்குச் சென்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்த பிறகு அதனைத் தன்னுடன் அழைத்துச் செல்ல அவர் முயன்றதால், உயிரியல் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில், நாங்கள் கருவைக் கலைக்கச் சொல்லவில்லை என்றும், வாடகைத் தாய் இந்த விவகாரத்தைக் தவறாகப் பயன்படுத்தி அரசியல் நாடகமாக்குகிறார் என்றும் பெற்றோர்கள் தரப்பில் வாதிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த டாலஸ் நீதிமன்றம், வாடகைத் தாய் குழந்தையுடன் மாகாணத்தை விட்டு வெளியேறத் தடை விதித்ததோடு, குழந்தைக்குத் தேவையான உயிா்காக்கும் சிகிச்சைகளை உடனடியாக வழங்க உத்தரவிட்டது. மேலும், பிறந்த குழந்தையின் முழுப் பொறுப்பும் உயிரியல் பெற்றோருக்கே சேரும் எனக் கூறி, வாடகைத் தாய்க்கு குழந்தை மீதான அதிகாரத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.