ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்துள்ள ஒரு கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போய் தேடப்பட்டு வந்த முதிய தம்பதியினரின் சடலங்கள், அவர்களின் சொந்த வீட்டிற்குள்ளேயே இருந்த ஒரு பெட்டிக்குள் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உதய்ப்பூர் மாவட்டம் புனாவளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லஹரிலால் மற்றும் அவரது மனைவி. இவர்களின் மகன் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வசித்து வருவதால், இந்த முதிய தம்பதியினர் மட்டும் பல ஆண்டுகளாகக் கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களைக் காணவில்லை. இவர்களின் மகன் தன் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போகவே, உறவினர்களை அழைத்து வீட்டில் பார்க்கச் சொன்னார். ஆனால் அங்கும் அவர்கள் இல்லை. இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமையன்று பெற்றோவைக் கண்டுபிடிக்கக் கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை காலை அந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று தேடியபோது, ஒரு பெரிய பெட்டிக்கு அருகில் சென்றதும் துர்நாற்றம் உக்கிரமாகியது. சந்தேகத்தின் பேரில் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தவர்கள் உறைந்து போயினர். உள்ளே முதிய தம்பதியினரின் சடலங்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து தகவலறிந்த சாய்ரா காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்தனர்.
தம்பதியினரின் மகன் கூறுகையில், “கடந்த செவ்வாய்க்கிழமை இரவன்றுதான் அம்மனுடன் போனில் பேசினேன். அதன்பிறகு புதன்கிழமை காலை அவர்கள் வீட்டை விட்டு மாயமான செய்தி கிடைத்தது” என்றார். மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இவர்களைக் கொன்றுவிட்டு, சடலம் வெளியே தெரியாமல் இருக்க பெட்டிக்குள் அடைத்து அதன் மீது படுக்கை விரிப்புகளைப் போட்டுச் சென்றுள்ளனர் என்று உறவினர்களும் கிராம மக்களும் கொந்தளித்துள்ளனர். தனித்து வாழ்ந்த முதியவர்களை நோட்டமிட்டு இந்த வெறிச்செயல் அரங்கேற்றப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
