கோவையில் தேசியக் கொடி ஏந்தி சுதந்திர தின பேரணி நடத்த அனுமதி கோரி பாஜக கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. த திராவிடர் கழகம் மற்றும் பாஜக போன்ற கட்சிகளின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

​இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல் துறையின் இந்த மாறுபட்ட நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. “தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்துவது என்ன பாவச்செயலா? கோவை என்ன பாகிஸ்தானிலா அல்லது ஆப்கானிஸ்தானிலா இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தேசப்பற்றை வெளிப்படுத்தும் நிகழ்வுகளுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் என அதிருப்தி வெளியிட்டார்.

​மற்ற அமைப்புகளுக்கு அனுமதி மறுத்துவிட்டு தவெகவுக்கு மட்டும் பேரணி நடத்த அனுமதி அளித்திருப்பது ஏன் என்பது குறித்தும், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தேசியக் கொடி பேரணியைத் தடுப்பது ஏற்புடையதல்ல என்றும் மனுதாரர் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இது அரசியல் ரீதியாகக் பாகுபாடு காட்டும் செயல் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

​இதையடுத்து, பாதுகாப்புச் சூழல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, மனுதாரருடன் காவல் துறை உடனடியாக ஆலோசித்து பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.