கொல்கத்தாவில் உள்ள பிரபல என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரவுப் பணியில் இருந்த 30 வயது நிரம்பிய ரூபாலி பர்மன் என்ற பெண் செவிலியர், கழிப்பறைக்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் மகப்பேறியல் துறையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த இவர், வழக்கம் போல் தனது கடமைகளை முடித்துவிட்டு இரவு 10:20 மணியளவில் கழிப்பறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் கதவைத் தட்டியும் எவ்விதப் பதிலும் வராததால், கதவைப் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தரையில் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக அவரை மீட்டு அவசர மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு சென்றபோதிலும், துரதிர்ஷ்டவசமாக அவர் அதற்குள்ளாகவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கொல்கத்தா காவல்துறையினரின் கொலை வழக்கு விசாரணைப் பிரிவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, செவிலியரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தடம் அறி அறிவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு சான்றுகளைச் சேகரித்து வருகின்றனர். கழிப்பறைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அவர் உள்ளே சென்றது முதல் நடந்த அனைத்துக் காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே ஒரு இளம் பெண் செவிலியருக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தற்கொலையா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் மர்மமான காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்துப் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழுமையாகத் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்க சுகாதாரத் துறையும் தனியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
