பருவமடைதல் என்பது குழந்தைப் பருவத்தில் இருந்து இளமைக் காலத்திற்கு உடல் மற்றும் மனம் மாறும் இயற்கையான வளர்ச்சி நிலையாகும். பொதுவாகப் பெண் குழந்தைகளுக்கு 8 முதல் 13 வயதிற்குள்ளும், ஆண் குழந்தைகளுக்கு 9 முதல் 14 வயதிற்குள்ளும் பருவமடைதல் தொடங்கும். ஆனால், பெண் குழந்தைகளுக்கு 8 வயதிற்கு முன்பாகவும், ஆண் குழந்தைகளுக்கு 9 வயதிற்கு முன்பாகவும் இந்தப் பருவமடைதலுக்கான மாற்றங்கள் தோன்றினால், அது ‘சீக்கிரமே பருவமடைதல்’  என்று அழைக்கப்படுகிறது.

மூளையில் உள்ள ஹார்மோன் கட்டுப்பாட்டு மையம் வழக்கத்தை விட முன்கூட்டியே செயல்படுவது இதற்குக் முக்கியக் காரணமாகும். இதுதவிர மரபியல் காரணங்கள், ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்கள், உடல் பருமன், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் இதற்கு முக்கியமான வழிகோலுகின்றன.

பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உயரம் வேகமாக அதிகரித்தல், மாதவிடாய் முன்கூட்டியே தொடங்குதல் போன்ற அறிகுறிகளும், ஆண் குழந்தைகளுக்குக் குரல் மாற்றம், தசை மற்றும் உடல் உறுப்புகள் வளர்ச்சி போன்ற மாற்றங்களும் காணப்படும். மேலும் இருபாலருக்கும் முகப்பரு மற்றும் உடல் நாற்றம் அதிகரிக்கும்.

இந்த நிலை குழந்தைகளிடம் மனஅழுத்தம், தன்னம்பிக்கைக் குறைவு மற்றும் சமூகச் சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஆரம்பத்தில் உயரம் வேகமாக அதிகரிப்பது போலத் தெரிந்தாலும், எலும்பு வளர்ச்சி விரைவாகவே நிறைவடைந்து விடுவதால், பிற்காலத்தில் குழந்தைகள் அடைய வேண்டிய இயல்பான உயரத்தை அடைய முடியாமல் போக வாய்ப்புள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சியில் இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் தெரிந்தால், உடனடியாகக் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். இரத்தப் பரிசோதனை மற்றும் எலும்பு எக்ஸ்ரே மூலம் இதைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் ஹார்மோன் கட்டுப்பாட்டு சிகிச்சைகள் அளிக்கப்படும். சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் பெற்றோர் தரும் மனரீதியான ஆதரவு ஆகியவை இச்சூழலில் மிகவும் அவசியமாகும்.