ஏடிஎம் மையங்களில் நடக்கும் புதிய வகை பணத் திருட்டு குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு சிசிடிவி காட்சியில், இரண்டு பெண்கள் ஏடிஎம் மையத்திற்குள் நுழைகின்றனர். முதல் பார்வையில் அவர்கள் சாதாரண வாடிக்கையாளர்கள் போலத் தெரிந்தாலும், கவனமாகப் பார்த்தால் அவர்களின் திடுக்கிடும் செயல்திட்டம் புரியும்.
அந்தப் பெண்களில் ஒருவர், ஏடிஎம் மிஷினில் பணம் வெளியேறும் துவாரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஒட்டுநாடாவை ஒட்டுகிறார். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வரும் அவர்கள், அந்த ஒட்டுநாடாவில் சிக்கியிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு நைஸாக நழுவிச் செல்கின்றனர்.
இந்த முறைக்கு ‘ஏடிஎம் கேஷ் டிராப்பிங்’ என்று பெயர். அதாவது, ஏடிஎம் மிஷினில் பணம் வரும் பாதையில் தடங்கலை ஏற்படுத்திப் பணத்தை உள்ளேயே பிடித்து வைப்பது. இதனால் ஏடிஎம் மிஷினில் கோளாறு ஏற்பட்டுப் பணம் வரவில்லை என்று நினைத்து வாடிக்கையாளர்கள் ஏமாந்து சென்றுவிடுவார்கள். அவர்கள் சென்ற பிறகு, அங்குத் தங்கியிருக்கும் பணத்தை அந்தத் திருடர்கள் எளிதாக எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
இப்படிப்பட்ட பணத் திருட்டுகளில் இருந்து தப்பிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். ஏடிஎம் மிஷினைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பணம் வரும் துவாரத்தில் பிசின், டேப் அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதேனும் ஒட்டப்பட்டுள்ளதா என்று சோதிக்க வேண்டும். வங்கி கணக்கில் பணம் கழிந்தும் ஏடிஎம்மில் பணம் வரவில்லை என்றால், உடனடியாக உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்புகொள்ள வேண்டும்.
மேலும், ஏடிஎம்மில் மிஷினில் சந்தேகப்படும்படி எதுவும் இருந்தால் அதை நீங்களாகவே கையால் தொடவோ அகற்றவோ முயலக் கூடாது. இரகசியக் குறியீட்டு எண்ணை உள்ளிடும் போது கீபேடை மறைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் உதவி கேட்பதைத் தவிர்க்க வேண்டும். ஏடிஎம் மையத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கோ அல்லது காவல்துறைக்கோ தகவல் தெரிவிப்பது நமது கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கும்.
