நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் முன்னணி தொழில் சாம்ராஜ்யத்தின் உச்சிக்கு உயர்ந்த டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், தனது பதவிக்கால நீட்டிப்புக்கான ஆதரவு ஒருகட்டத்தில் சர்வசம்மதமாக கிடைக்காததால், தானாக முன்வந்து பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன், அரசுப் பள்ளிக் கல்வியைக் கடந்து, கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் உயர்கல்வியைப் பயின்றார். கடந்த 1987-ஆம் ஆண்டு ஒரு சாதாரண இன்டர்ன் பணியாளராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இணைந்த அவர், படிப்படியாக உயர்ந்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

டாடா குழுமத்தின் வரலாற்றில், குடும்பத்தைச் சாராத மற்றும் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லாத முதல் தொழில்முறை நிர்வாகியாக கடந்த 2017-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். இவரது தலைமையில், டாடா நிறுவனம் விமான நிறுவனமான ஏர் இந்தியாவை மீண்டும் விலைக்கு வாங்கியது உள்ளிட்ட பல முக்கிய மைல்கற்களை எட்டியது. வரும் 2027 பிப்ரவரியில் இவரது பதவிக்காலம் முடியவிருந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகள் பதவியில் தொடர அறக்கட்டளைகள் ஒப்புதல் அளித்தும், டாடா சன்ஸ் வாரியத்தில் உள்ள ஒரு உறுப்பினர் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒருமித்த கருத்து இல்லாததால் குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தாமே இந்த முடிவைத் தள்ளிவைத்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களாகியும் இந்த விவகாரத்தில் தெளிவு பிறவாததால், ஊழியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இனி தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், விரைவில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் டாடா சன்ஸ் வாரியத்திற்குத் கடிதம் எழுதியுள்ளார்.

“>

 

நாற்பது ஆண்டுகால அர்ப்பணிப்பான சேவைக்குப் பிறகு, டாடா குழுமத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்கிய சந்திரசேகரனின் இந்த திடீர் விலகல் இந்தியத் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.