அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் தனது பயண விமானம் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது, ரகசிய சேவை மற்றும் ராணுவத்தின் ஆலோசனையின்படி வேறு விமானத்தில் பயணம் செய்ததாக அவர் கூறியுள்ளார். தமக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வருவதாகவும், அவற்றில் சில பொதுமக்களுக்கு தெரியாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வழக்கமாகப் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்துக்கு பதிலாக, வேறு விமானத்தைப் பயன்படுத்தியது குறித்து முன்னதாக செய்திகள் வெளியாகின. கத்தாரிடம் இருந்து அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட போயிங் 747-8 விமானத்துக்குப் பதிலாக பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் டிரம்ப் சிறிய சி-32ஏ விமானத்துக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த விமான மாற்றம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் முன்னதாக அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஓஹியோவில் இருந்து திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், விமானம் மாற்றப்பட்டதை உறுதி செய்தார். ரகசிய சேவை மற்றும் ராணுவத்தினர் தன்னை வேறு விமானத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும், அவர்களின் ஆலோசனையை தான் பின்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது உண்மையில் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், தமக்கு அடிக்கடி பல்வேறு அச்சுறுத்தல்கள் வருவதாக டிரம்ப் தெரிவித்தார். முக்கியமான பதவியில் இருக்கும் அதிபர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், தன்னைப் பொறுத்தவரை பொதுமக்களுக்குத் தெரியாத பல அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். தாம் மிகவும் முக்கியமான அதிபராக இருப்பதால் அதிக அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
