விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது பயணிகள் எடுத்துச் செல்லும் பொருட்களில் இருந்து அவ்வப்போது சில விசித்திரமான மற்றும் சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால், ஒரு பயணியின் கைப்பைக்குள் இருந்து மனித முகத்தை ஒத்த ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு வெளிப்பட்டால் அங்கிருக்கும் அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள நாக்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது, பயணி ஒருவரின் கைப்பைக்குள்ளிருந்து குரங்கின் மண்டை ஓடு கைப்பற்றப்பட்ட சம்பவம் விமான நிலைய அதிகாரிகளையும் சக பயணிகளையும் உறைந்து போகச் செய்துள்ளது.

விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள எக்ஸ்-ரே ஸ்கேனர் கருவி வழியே பயணிகள் தங்களது உடமைகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட பயணியின் கைப் பையைச் சோதனையிட்ட போது, ஸ்கேனர் திரையில் ஒரு பயங்கரமான எலும்புக்கூடு வடிவம் தென்பட்டுள்ளது.

உடனடியாகச் சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர் அந்தப் பையைத் தனியாகப் பிரித்து, அந்தப் பயணியின் முன்னிலையிலேயே பையை திறந்து சோதனையிட்டனர். பையின் உள்ளே துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த குரங்கின் காய்ந்த மண்டை ஓடு ஒன்றைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.

இதையடுத்து, அந்தப் பயணியை உடனடியாகத் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனவிலங்குகளின் உடல் பாகங்களைக் கடத்துவதோ அல்லது வைத்திருப்பதோ கடுமையான குற்றமாகும்.

அந்தப் பயணி எந்த நோக்கத்திற்காக இந்தச் மண்டை ஓட்டை எடுத்துச் சென்றார், இது மூடநம்பிக்கை அல்லது மாந்திரீக காரணங்களுக்காகக் கொண்டு செல்லப்பட்டதா அல்லது வனவிலங்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் வனத்துறையினரும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.