மகாராஷ்டிர மாநிலத்தில் ஆனி மற்றும் ஆடி மாதங்களில் ‘ஆசாத் பார்ட்டி’ என்ற பெயரில் நண்பர்கள் ஒன்றாகக் கூடி கறி விருந்து வைத்து மகிழ்வது வழக்கம். அப்படியொரு விருந்து உபசரிப்பு புனே நகரில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாகக் குருதி சிந்திய ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுடச்சுட மட்டன் வெந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ஊரை விட்டுத் தடிபார் செய்யப்பட்ட பிரபல ரவுடி ஒருவன் கையில் கொய்தா கத்தியுடன் பாய்ந்து வந்து நடத்திய வெறியாட்டம் அப்பகுதி முழுவதையும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
புனேயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் நண்பர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து ஆசாத் பார்ட்டிக்காக மட்டன் சமைத்துக் கொண்டிருந்தனர். கறி வெந்து மணம் வீசிக் கொண்டிருந்த அந்தச் சூழலில், ஊருக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுத் தடிபார் செய்யப்பட்ட ரவுடி ஒருவன், தனது கூட்டாளிகளுடன் கையில் கூர்மையான ‘கொய்தா’ கத்தியை ஏந்திக்கொண்டு அங்குத் திடீரென நுழைந்துள்ளான்.
பழைய முன்விரோதம் காரணமாக அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த ரவுடி, கண் இமைக்கும் நேரத்திற்குள் கையில் இருந்த கொய்தா கத்தியால் அவரை சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளான்.
விருந்து முடிந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இடத்தில், திடீரென அரங்கேறிய இந்த ரத்தக் களறியைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த நபரை மீட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஊரை விட்டுத் தள்ளிய பின்னரும் ரவுடி ஒருவன் தைரியமாக ஊருக்குள் புகுந்து பொது இடத்தில் கத்தியால் வெட்டிய சம்பவம், புனே காவல்துறையின் கண்காணிப்பு நடவடிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பி ஓடிய அந்தத் தடிபார் ரவுடியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
